**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

திங்கள், 12 ஏப்ரல், 2010

பேரவைக் குடும்பச் சந்திப்பு - அம்பேத்கர் பிறந்தநாள் விழா

சூலூர் பாவேந்தர் பேரவையின் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி
மற்றும் அம்பேத்கரின் 120- ஆம் பிறந்தநாள் விழா திருவள்ளுவர் ஆண்டு 2041
14.4.2010 புதன் கிழமை மாலை 5.30 மணிக்கு சூலூர் கலங்கல் பாதையில்
உள்ள தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தில் (நடராசன் அங்கம்மாள் வளாகம் மேல்தளம் ) நடைபெற உள்ளது.

நிகழ்வுகள்

* புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்

* சாதி மதம் கடந்து தமிழ்க் குடும்பங்கள் ஒன்று கூடல்

* சாதி மறுப்பு மணம் புரிந்த புது இணையருக்குப் பரிசளித்துப் பாராட்டல்

* வாழ்க்கைச் செய்திகளைக் கலந்து பேசுதல் - விருந்துண்ணல்


வரவேற்பு : சூ.. வேலுமயில்

தலைமை : கி.மா. கனகராசன்


சிறப்பு வருகை : பேரா. மீனாட்சி சுந்தரம்
பேராசிரியை. அ. சானகி


நன்றி : சூ.மா. சரவணகுமார்

விழைவு


சாதிமறுப்பு மணம் புரிந்த புதுமணமக்களை விழாவிற்குத் தோழர்கள் அழைத்து
வருதல்.

ஞாயிறு, 1 நவம்பர், 2009

"பெரியார் சிந்தனைகள்" கருத்தரங்கம்


பெரியார் சிந்தனைகள் எனும் அறிவுக்களஞ்சியத்தை முன்பு மூன்று தொகுதிகளாக வழங்கியவர் அய்யா ஆனைமுத்து அவர்கள். இப்போது அவை கூடுதல் செய்திகளுடன் இருபது தொகுதிகளாக பிப்பிரவரி 2010 ல் வெளிவர உள்ளது என்பதையும் சென்ற பதிவில் தந்துள்ளோம். இந்த நூலுக்கு முன்பதிவு செய்துள்ள தோழர்களின் கலந்தாய்வும் , பெரியார் சிந்தனைகள் நூலைப் பற்றிய கருத்தரங்கும் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தில் நேற்று 1.11.09 மாலை 6.oo மணிக்கு நடைபெற்றது. நூலைப் பற்றிய சிறப்புரையை தோழர் ந. பன்னீர்செல்வம் நிகழ்த்தினார். முன்பாக பேரவையின் செயலாளர் நா. வரதராசு வரவேற்புரை ஆற்றினார். சிறப்புரைக்குப் பின்பு நூலின் விற்பனை அணுகுமுறை பற்றியும், வழிமுறை பற்றியும் தோழர்களின் கருத்துக்களும் பதிவு செய்யப்பட்டது. கருத்தரங்கின் இறுதியாக பொருளாளர் ச. அங்கமுத்து நன்றியுரை ஆற்றினார்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்




தோழர் ஆனைமுத்து அவர்கள் 30.09.09 அன்று சூலூரில் அவர் பெயரால் அமைந்த தோழர் வே.ஆனைமுத்து அவைக்கூடத்தில் தோழர்களை சந்தித்தார்.அவரின் கடின உழைப்பின் விளைவாய் பெரியார் சிந்தனைகள் 2 ம் பதிப்பு 2010 ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்தார்.தோழர்கள் 200 படிகள் முன் பதிவு செய்வதாக உறுதி கூறினார்கள்.பெரியார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரின் சிந்தனைகள் தலைப்பு வாரியாக படிநிலைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வது நம் தலையாய கடமையாகும்..



சனி, 3 அக்டோபர், 2009

பெரியார் பிறந்தநாள் விழா! சூலூர் பாவேந்தர் பேரவை - குடும்ப சந்திப்பு!

தந்தை பெரியார் 131 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி - பகுத்தறிவாளர்களின் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி 17.9.2009 மாலை 6.00 மணிக்கு சூலூரில் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம் அரங்கில் நிகழ்ந்தது.
சூலூர் பாவேந்தர் பேரவை உறுப்பினர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றதோடு கோவை, பல்லடம் பகுத்தறிவாளர்களும் குடும்பத்துடன் பங்கேற்று - பகுத்தறிவு வாழ்க்கை நெறிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம் உருவாகக் காரணமான பொறியாளர் சூ.ந. பன்னீர்செல்வம் - தென்மொழி இணையர் இந்தக் குடும்பச் சந்திப்பின் விருந்துப் பொறுப்பை ஏற்று அனைவரையும் உபசரித்தனர்.
பங்கேற்ற குடும்பத்தினர் தத்தம் குடும்ப உறுப்பினர்களோடு அவைமுன் தோன்றி - வாழ்க்கை அறிமுகம் வழங்கினர். பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற ஆசிரியர் மலர்விழி வரதராசு, ஆசிரியர் சூ.ப. வேலுமயில் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
ஆசிரியர் மு. நடராசன், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வேணுகோபால் - இருவரும் தந்தை பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்தனர்.
தந்தை பெரியாரின் சாதனை வாழ்வையும் பகுத்தறிவு வாழ்வின் தேவையையும் விளக்கி எழுத்தாளர் பாமரன், புலவர் செந்தலை ந. கவுதமன் கருத்து விளக்கக் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.
வெ.க.சண்முகவேல் தலைமையில் சூ.நா.வரதராசு வரவேற்புடன் தொடங்கிய குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி ச.அங்கமுத்து நன்றியுடன் நிறைவுற்றது.

திராவிடர் இயக்க நூற்களஞ்சியம் மதுரை வெற்றிவேந்தன் (செயராசு) மறைவு


திராவிடர் இயக்க இதழ்கள், நூல்கள், செய்திக்குறிப்புகள் முதலியவற்றைப் பாதுகாப்பதையே வாழ்நாட்பணியாகக் கருதியவர் செயராசு எனும் இயற்பெயர் கொண்ட மதுரை வெற்றிவேந்தன் அவர்கள்! கடந்த 7.9.2009 ஆம் நாள் அவர்தம் 67 ஆம் வயதில் கோவையில் மறைவெய்தினார்.
கோவை, சேலம், மதுரை நகரங்களில் காப்பீட்டுக் கழக அலுவலராகப் பணியாற்றிய இவர் - தொழிற்சங்கப் பணிகளில் தொடர்பும், பகுத்தறிவியக்கப் பணிகளில் முனைப்பும் கொண்டவராக வாழ்ந்தவர்கள்.
திராவிடர் இயக்க நூற்களஞ்சியமாகத் திகழ்ந்த மதுரை வெற்றிவேந்தன் அவர்கள் கடந்த ஓர் ஆண்டாக கோவை சீலா முதியோர் இல்லத்தில் வாழ்ந்துவந்தார். பகுத்தறிவுக் கொள்கையில் அழுத்தமான பிடிப்பும், நாத்திக வாழ்வில் அடங்காப் பெருவிருப்பும் கொண்டவராக இறுதி நாள்வரை வாழ்ந்த இவரின் உடல் அடக்கம் கோவை பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் பகுத்தறிவு முறைப்படி நிகழ்ந்தது.

சூலூர் பாவேந்தர் பேரவைத் தோழர்கள் அவரின் இறுதிகாலப் பராமரிப்பையும் தொடர்பையும் மறைவு நாள்வரைமேற்கொண்டிருந்தனர்.

இறுதி நிகழ்ச்சியில் பெரியார் திராவிட கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள், சூலூர் பாவேந்தர் பேரவை உறுப்பினர்கள், காப்பீட்டுக்கழகத் தொழிற்சங்க முன்னணியினர், உறவினர்கள் பங்கேற்றனர்.

மதுரை வெற்றிவேந்தன் அவர்களோடு உடன் பணியாற்றியவரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர். தனபால் அவர்கள் இறுதி நிகழ்ச்சிகளைப் பகுத்தறிவு முறைப்படி நெறிப்படுத்தினார்.

தோழர் வெ. ஆறுச்சாமி தலைமையில் நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் பேராசிரியர். கனல் மைந்தன், புலவர் செந்தலை.நகவுதமன், எழுத்தாளர் ப. குணசேகர், தொழிற்சங்கத் தலைவர்கள் உரையாற்றினர். மறைந்த தோழர் மதுரை வெற்றிவேந்தன் அவர்களின் பகுத்தறிவுக்கொள்கை மாறாத செம்மாந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்ணீர் மல்க விவரித்தனர்.
உடல் கிடத்தப்பட்ட நிலையிலேயே நிகழ்ந்த இரங்கல் நிகழ்ச்சி, அனைவர் மனத்திலும் துயரத்தை நிரப்பியது.

இரங்கல் நிகழ்ச்சிக்குப் பின்பே, மின்மயானத்திற்குள் எரியூட்ட எடுத்துச்செல்லப்பட்டது.



வியாழன், 16 ஏப்ரல், 2009

தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம்





கோவை மாவட்டம் சூலூரைப்பற்றி மொழி, இன, சமூக உணர்வாளர்களிடையே ஒரு நம்பிக்கையும் பற்றும் எப்போதும் உண்டு. ஊரையும் சமூகத்தையும் நினைப்பவர்கள் அதிகம் இருப்பதால். வேர்களை மறக்காமல் விழுதுகளாய்த் தாங்கி தன் சமூகக் கடமையைச் செய்து கொண்டிருப்பதாலேயே அறிஞர்களால் "சுயமரியாதைச் சூலூர்" என்று போற்றப்படுகிறது. அதை நிலை நாட்டும் விதமாக அறிவு மலர்ச்சிக்கும் கருத்து வளர்ச்சிக்கும் களம் அமைக்க எழுந்துள்ளதுதான் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம். பல இலக்கம் செலவு செய்து அவைக்கூடத்தை உருவாக்கியிருப்பவர் நமது பேரவையின் தோழர் சூ. ந. பன்னீர் செல்வம் அவர்களும் அவரது கொள்கைக் குடும்பமும்! கீழ்த்தளம் நடராசன் அங்கம்மாள் வளாகமாகவும் மேல்த்தளம் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
நடராசன் அங்கம்மாள் வளாகத்தை முன்னாள் பேரூராட்சித் தலைவர்
திரு. சூ. ர. தங்கவேலு அவர்கள் திறந்து வைத்துப் பேசினார்.
தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடத்தை திரு. ந. மு. நடராசன் மற்றும் திருமதி. சூ. மு. அங்கம்மாள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
விழாவில், தோழர் பன்னீர் செல்வத்தின் தந்தை ஆசிரியர் ந. மு. நடராசன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு புலவர் செந்தலை ந.கவுதமன் தலைமை தாங்கினார்.
ஊ. கி. நா. இரா. செல்வராசு மற்றும் பேரவையின் தலைவர் வெ.க. சண்முகவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். திரு சூ. அ. சுப்பிரமணியம், புலவர் சூ. ம. வெள்ளிங்கிரி, திரு.சூ. மீ. காளிமுத்து முதலியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பெரியகுளம் நகராட்சி ஆணையரும் பன்னீர் செல்வத்தின் நண்பருமான திரு. சூலூர் க.சரவணகுமார் சிறப்புரையாற்றினார்.
விழாவில் கட்டிடத்தை சிறப்பாக வடிவமைத்த பொறியாளரும் பன்னீர் செல்வத்தின் கொள்கைத் தோழருமான கவிஞர் அ.ப. சிவாவிற்கு சிறப்பு செய்யப்பட்டது.
வளாக நோக்க மகிழ்வுரையாக தோழர் சூ. ந.பன்னீர் செல்வம் பேசுகையில்,இந்த வளாகம் ஆனைமுத்து அய்யா பெயரைத் தாங்கி இருப்பதர்க்கு காரணம் அவர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டில் பயன் பெற்றதன் நன்றி எனக் குறிப்பிட்டார்.
தன் சொந்த உழைப்பினாலும் கொண்ட கொள்கையினாலும் இந்த அவைக்கூடத்தை சமூகப் பயன்பாட்டுக்காக மட்டும் ஒதுக்கியிருக்கும் அவர்களது ஈகம் வாழ்க! கொள்கை வெல்க!
வேர்களைப்
பாதுகாக்கும் விருப்பமும் முயற்சியும் தலை தூக்கட்டும்;
தமிழகம் தழைத்தோங்கட்டும்;
வாழ வைத்தோரை வாழ வைத்து வாழ்க தமிழினம்!


வெள்ளி, 27 மார்ச், 2009

பேரவை கருத்தரங்கம்

கருத்தரங்கம்

நாள் : 29.3.09 ஞாயிறு மாலை 4.30 மணி.

இடம் : சூலூர் அறிவியல் பூங்கா (காட்சிக் கூடம்)

கலங்கல் பாதை, சூலூர்.

தலைமை : க.தேவராசு

வரவேற்பு : சூ.ந.வரதராசு

நூல் அறிமுகம் : சூ.இல.விசயகுமார்

நூல்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

(அமெரிக்க சூழ்ச்சிகளைத் தோலுரிக்கும் நூல். -விடியல் வெளியீடு , கோவை.)

ஊர் நல உணர்வுரை : சூ.சு.தமிழரசன்

சூலூரில் உருவானவையும், உருவாக வேண்டியவையும்

நன்றி : ச.அங்கமுத்து

(மாதந்தோறும் இறுதி ஞாயிறு மாலை பாவேந்தர் பேரவை கருத்தரங்கம் நிகழும்)

திங்கள், 23 பிப்ரவரி, 2009

உருவானது சூலூர் வட்டம்

கோவை மாவட்டத்தில் பல்லடம் வட்டத்தில் இயங்கிவந்த சூலூர் சிறப்பு பேரூராட்சி 22.02.09 ஞாயிறு முதல் சூலூர் வட்டமாக (தாலுகா) தேர்வுசெய்யப் பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டதை ஒட்டி பல்லடம் திருப்பூர் மாவட்டத்தோடு இணைந்தது. நேற்று 23.02.09 திங்கள் முதல் சூலூர் வட்டத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

மனித சங்கிலி

ஈழத் தமிழர்களின் உயிர் காக்கக் கைகோத்துக் குரல் கொடுக்கும் மனித சங்கிலிப் போராட்டம் கோவை நகர்மண்டபத்திலிருந்து (டவுன்ஹால்) நாகை வரை இன்று 17.2.09 செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரை நிகழ்த்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. அதை ஒட்டி சூலூர் ஒன்றியம் ஒண்டிபுதூர் மேம்பாலம் முதல் காரணம்பேட்டை வரை ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்கள்,மாணவர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்வு இந்திய அரசின் நடவடிக்கையிலும் சிங்கள பேரினவாத அரசின் இனப்படுகொலை நிகழ்வை தடுத்து நிறுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதே தமிழகத் தமிழர்களின் உறுதியான நம்பிக்கை!
கை கோப்போம்! கை கோப்போம்!
ஈழத் தமிழர் துயர் நீங்க கை கோப்போம்!

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

தன்மான இயக்க மூத்த தோழர் செந்தலை ச. நடராசன் மறைவு.


புலவர் செந்தலை ந. கவுதமனின் தந்தையாரும், சுயமரியாதை இயக்கமாக இருந்த 1944 ஆம் ஆண்டிலிருந்து தன்மான இயக்கச் செயல் வீரராகவும், தஞ்சை மாவட்டம் செந்தலை திராவிடர் கழகத் தலைவராகவும் இருந்தவருமான - தோழர் ச. நடராசன் தம் 86 ஆம் வயதில் கோவை - சூலூரில் தம் மகன் இல்லத்தில் 7.2.2009 ஆம் நாள் இயற்கை எய்தினார். அவர் கண்கள் மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டன.
இரங்கல் நிகழ்ச்சியில் கோவை. மு. இராமநாதன், கு.வெ.கி. ஆசான் முதலியோர் உரையாற்றினர்.சூலூரில் நடந்த இரங்கல் நிகழ்ச்சியிலும் படத்திறப்பு நிகழ்ச்சியிலும் கோவை மாவட்ட முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள் திரளாகப் பங்கேற்றார்கள்.
அமைச்சர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் வே. ஆனைமுத்து, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் முதலியோர் நேரிலும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொலைபேசியிலும் இரங்கல் தெரிவித்தார்கள்.
திராவிடர் கழகக் கொடி போர்த்தப்பட்டு தோழர் ச. நடராசன் உடல் எந்த மதச் சடங்குகளுமின்றி நல்லடக்கம் செய்யப்பட்டது.