**********************************************************

பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!

புதன், 21 ஜனவரி, 2009

கலைஞனின் கைவண்ணத்தில்.....


பேரவையின் தோழர் ப.முருகேசன் அவர்கள் 2004 ல் வரைந்த அய்யாவின் உருவப்படம்.

திங்கள், 19 ஜனவரி, 2009

புத்தகம் புரட்சி செய்யும்!


ரு நூல்நிலையம் திறக்கப்படும்போது பத்துச் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்பார்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "அறிவு அறம் காக்கும் கருவி" என வள்ளுவம் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியது.
ஆரம்பக் கல்விகூட நிறைவு பெறமுடியாத நிலையில் தம் இளம் பருவத்திலேயே புத்தகம் கட்டடம் (பைண்டிங்) செய்யும் கடையில் பணி புரிந்து வந்தான் ஓர் இளைஞன்.தான் வேலை செய்யும்போதே நூற்றுக்கும் மேலான நூல்களைக் கற்றுத் தன் அறிவைக் கூர்மையாக்கிக் கொண்டான்.அதன் விளைவு அறிவியலில் எண்ணற்ற சோதனைகளை வெற்றிகரமாக நடத்திக்காட்டினான்.
"ஐசன் வாட்ஸ்" என்ற அறிஞர் எழுதிய "சிந்தனை ஆற்றலைப் பெருக்கிக்கொள்வது எப்படி?"என்ற நூல் அவனை மிகவும் கவர்ந்தது.
1831 ஆம் ஆண்டு மின்னோட்டத்தின் விளைவுகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டான்.அவ்வறிக்கையே பின்னாளில் வந்த எடிசனால் உலகுக்கு ஒளி வழங்கப் பயன்பட்டது.அந்த இளைஞன்தான் இங்கிலாந்து நாட்டின் இணையற்ற அறிவியல் அறிஞன் மைக்கேல் பாரடே.
எத்தனை எத்தனையோ செயல்களைக் குறுக்கு வழியில் செய்யக் கூடும்.ஆனால் அறிவைப் பெறுவதற்கு ஒரே வழிதான் இருக்கிறது:அது படிப்பு என்றார் இலெனின்.அப்புரட்சியாளரின் கூற்றை மெய்யாகியவன் பாரடே.
மாவீரன் அலெக்சாண்டர் உறங்கும்போது எப்பொழுதும் தலையணைக்கு அடியில் இரண்டு பொருள்கள் இருக்குமாம்.ஒன்று குத்துவாள்:மற்றொன்று நல்ல நூல்கள்.
ஒரு நாடு சிந்திக்கத் தொடங்கிவிட்டால் அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.இதை உணர்த்த ரூசோ சமுதாய ஒப்பந்தம் என்ற நூலின் மூலம் பிரெஞ்சு நாட்டின் விடுதலைக்கு வித்திட்டார்.
ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சி முற்றுப்பெற்று 1917 ஆம் ஆண்டு சோவியத் நாடு இலெனின் தலைமையில் புதிய அரசை அமைத்தது.அவ்விடுதலைக்கு மார்க்சிம் கார்க்கி எழுதிய "தாய்" நாவல் உந்துவிசையாக இருந்ததென அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர்.
அர்ஜென்டினாவில் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்யவே மருத்துவப் படிப்பைப் பயின்றார் சேகுவேரா.பொதுவுடைமை இயக்கத்தின் போராளியும், சேகுவேராவின் முதல் மனைவியுமான கில்டா கடியா அவர்கள் கவுதமாலா என்ற பகுதியில் நூலகம் ஒன்றை நடத்தி வந்தார்.இலத்தின் அமெரிக்க மார்க்சியத்தின் தந்தை என அழைக்கப்பட்ட "கோசே கார்லோஸ் மரியதேகி "என்ற அறிஞர் எழுதிய நூல்களை 1953 ஆம் ஆண்டில் இருந்து நன்கு கற்றறிந்தார் சேகுவேரா.அதோடு அந்நூலகத்தில் மார்க்சின் நூல்களையும் படித்துச் சிந்தித்தார்.
அதன் விளைவு 1955 ஆம் ஆண்டு மெக்சிகோவில் பிடல் காஸ்ட்ரோ சகோதரர்களைச் சந்தித்து கியூபா புரட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.அவ்வரலாற்று நிகழ்வுகள்தான் இன்றும் உலகப் புரட்சியாளர்களின் வரிசையில் நின்று காலத்தால் அழியாமல் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் சேகுவேரா.
ஆதிக்கவாதிகளால் அடிமைப்படுத்தப்பட்ட சீன மக்களின் விடுதலைக்காக தன் புரட்சிப் பயணத்தை மேற்கொண்டார் மாவோ.போராட்டத்திற்குத் தடையாய் இருந்த தன் குழந்தையை வழியில் செல்பவரிடம் கொடுத்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார்.பீக்கிங் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் பணிபுரிந்த காரணத்தால் அங்கு உலகப் புரட்சியாளர்களின் வரலாறுகளைக் கற்றுணர்ந்தார்.ஒரு நூலகம் மாவோவை போராளியாக்கியது.
மனிதகுல விடுதலைக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் காரல் மார்க்சு.ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவே தன் இறுதிக்காலம் முழுமையும் போராடியவர் அம்பேத்கார்.இவ்விருவரும் உலகின் மிகப்பெரிய நூலகமான இலண்டனில் உள்ள நூலகத்தில் அதிக நாள்கள் படித்துச் சாதனை படைத்தனர்.இன்றும் அப்புரட்சியாளர்களின் படங்கள் அந்நூலகத்தை அலங்கரிக்கின்றன.
வாழ்வின் விளிம்பில் கூட இலெனின் எழுதிய "அரசும் புரட்சியும்" என்ற நூலைப் படித்துவிட்டு மரணத்தை மகிழ்ச்சியோடு வரவேற்றவன் பகத்சிங்.
நம் இனத்தின் இழிவு நீங்க தான் இறுதி மூச்சு நிற்கும்வரை இமை மூடாமல் போராடி,இடுப்பில் கட்டிய துண்டை தோளில் போட வைத்துத் தமிழனைத் தலை நிமிரச் செய்தவர் தந்தை பெரியர்.அந்த இனமான போராளி,சில வேளைகளில் மேடையில் அமர்ந்தபடியே தன்னைப்பேச அழைக்கும்வரை ஊன்றிப் படித்துக்கொண்டே இருப்பார்.
1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் செல்ல இருந்தார். வழியனுப்ப தந்தை பெரியார் அவர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தார். அண்ணா அவர்கள் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அய்யாவுக்கு கோபம்,விமானம் புறப்படும் கடைசி நிமிடத்தில் அண்ணா ஓடிவர,ஏன் இவ்வளவு நேரம் என்று அய்யா கேட்க,"நான் புத்தகக் கடையில் நூல்கள் வாங்கிக் கொண்டிருந்தேன் அய்யா,ஒருவேளை நான் உயிருடன் திரும்பி வரவில்லையெனில் நான் விரும்பிய நூல்களைப் படிக்க முடியாமலேயே போய்விடுமல்லவா?"என்று அண்ணா கூற அய்யா கண்ணில் நீர்மல்க அண்ணாவைக் கட்டித் தழுவிக்கொண்டார்.
இச்சான்றோர்களின் வழி நின்று சமூக விடுதலைக்குக் குரல் கொடுப்போம்!
அறிவாயுதத்தை உருவாக்க அரிய நூல்களைப் பயில்வோம்!
-சூலூர். க. தேவராசு
நன்றி: சிந்தனையாளன் பொங்கல் மலர் 2009.