தந்தை பெரியார் 131 ஆம் பிறந்தநாள் விழாவையொட்டி - பகுத்தறிவாளர்களின் குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி 17.9.2009 மாலை 6.00 மணிக்கு சூலூரில் தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம் அரங்கில் நிகழ்ந்தது.
சூலூர் பாவேந்தர் பேரவை உறுப்பினர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்றதோடு கோவை, பல்லடம் பகுத்தறிவாளர்களும் குடும்பத்துடன் பங்கேற்று - பகுத்தறிவு வாழ்க்கை நெறிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
தோழர் வே. ஆனைமுத்து அவைக்கூடம் உருவாகக் காரணமான பொறியாளர் சூ.ந. பன்னீர்செல்வம் - தென்மொழி இணையர் இந்தக் குடும்பச் சந்திப்பின் விருந்துப் பொறுப்பை ஏற்று அனைவரையும் உபசரித்தனர்.
பங்கேற்ற குடும்பத்தினர் தத்தம் குடும்ப உறுப்பினர்களோடு அவைமுன் தோன்றி - வாழ்க்கை அறிமுகம் வழங்கினர். பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்ற ஆசிரியர் மலர்விழி வரதராசு, ஆசிரியர் சூ.ப. வேலுமயில் பரிசு வழங்கிப் பாராட்டப்பட்டனர்.
ஆசிரியர் மு. நடராசன், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வேணுகோபால் - இருவரும் தந்தை பெரியார் உருவப்படத்தைத் திறந்து வைத்தனர்.
தந்தை பெரியாரின் சாதனை வாழ்வையும் பகுத்தறிவு வாழ்வின் தேவையையும் விளக்கி எழுத்தாளர் பாமரன், புலவர் செந்தலை ந. கவுதமன் கருத்து விளக்கக் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.
வெ.க.சண்முகவேல் தலைமையில் சூ.நா.வரதராசு வரவேற்புடன் தொடங்கிய குடும்பச் சந்திப்பு நிகழ்ச்சி ச.அங்கமுத்து நன்றியுடன் நிறைவுற்றது.
**********************************************************
பொதுமக்கள் நலம்நாடிப் புதுக்கருத்தைச் சொல்க!
சனி, 3 அக்டோபர், 2009
திராவிடர் இயக்க நூற்களஞ்சியம் மதுரை வெற்றிவேந்தன் (செயராசு) மறைவு
திராவிடர் இயக்க இதழ்கள், நூல்கள், செய்திக்குறிப்புகள் முதலியவற்றைப் பாதுகாப்பதையே வாழ்நாட்பணியாகக் கருதியவர் செயராசு எனும் இயற்பெயர் கொண்ட மதுரை வெற்றிவேந்தன் அவர்கள்! கடந்த 7.9.2009 ஆம் நாள் அவர்தம் 67 ஆம் வயதில் கோவையில் மறைவெய்தினார்.
கோவை, சேலம், மதுரை நகரங்களில் காப்பீட்டுக் கழக அலுவலராகப் பணியாற்றிய இவர் - தொழிற்சங்கப் பணிகளில் தொடர்பும், பகுத்தறிவியக்கப் பணிகளில் முனைப்பும் கொண்டவராக வாழ்ந்தவர்கள்.
திராவிடர் இயக்க நூற்களஞ்சியமாகத் திகழ்ந்த மதுரை வெற்றிவேந்தன் அவர்கள் கடந்த ஓர் ஆண்டாக கோவை சீலா முதியோர் இல்லத்தில் வாழ்ந்துவந்தார். பகுத்தறிவுக் கொள்கையில் அழுத்தமான பிடிப்பும், நாத்திக வாழ்வில் அடங்காப் பெருவிருப்பும் கொண்டவராக இறுதி நாள்வரை வாழ்ந்த இவரின் உடல் அடக்கம் கோவை பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்தில் பகுத்தறிவு முறைப்படி நிகழ்ந்தது.
சூலூர் பாவேந்தர் பேரவைத் தோழர்கள் அவரின் இறுதிகாலப் பராமரிப்பையும் தொடர்பையும் மறைவு நாள்வரைமேற்கொண்டிருந்தனர்.
இறுதி நிகழ்ச்சியில் பெரியார் திராவிட கழகத் தோழர்கள், பகுத்தறிவாளர்கள், சூலூர் பாவேந்தர் பேரவை உறுப்பினர்கள், காப்பீட்டுக்கழகத் தொழிற்சங்க முன்னணியினர், உறவினர்கள் பங்கேற்றனர்.
மதுரை வெற்றிவேந்தன் அவர்களோடு உடன் பணியாற்றியவரும், சீரிய பகுத்தறிவாளருமான தோழர். தனபால் அவர்கள் இறுதி நிகழ்ச்சிகளைப் பகுத்தறிவு முறைப்படி நெறிப்படுத்தினார்.
தோழர் வெ. ஆறுச்சாமி தலைமையில் நிகழ்ந்த இரங்கல் கூட்டத்தில் பேராசிரியர். கனல் மைந்தன், புலவர் செந்தலை.நகவுதமன், எழுத்தாளர் ப. குணசேகர், தொழிற்சங்கத் தலைவர்கள் உரையாற்றினர். மறைந்த தோழர் மதுரை வெற்றிவேந்தன் அவர்களின் பகுத்தறிவுக்கொள்கை மாறாத செம்மாந்த வாழ்க்கை நிகழ்ச்சிகளை அனைவரும் கண்ணீர் மல்க விவரித்தனர்.
உடல் கிடத்தப்பட்ட நிலையிலேயே நிகழ்ந்த இரங்கல் நிகழ்ச்சி, அனைவர் மனத்திலும் துயரத்தை நிரப்பியது.
இரங்கல் நிகழ்ச்சிக்குப் பின்பே, மின்மயானத்திற்குள் எரியூட்ட எடுத்துச்செல்லப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)